சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 167
22/03/2022 செவ்வாய்
-பணி-
தன் கடன் பணி செய்வ தென்றார்
தலை சாய்க்கோம் பணியோம் என்றார்
நம் கடம்பனைப் பணிவேன் என்றார்
நாட்டிற்கு வாகீசர் நயந்து சென்றார்!
காலை முதல் மாலை வரை என்று
கணக் கில்லா பணிகள் எமக்குண்டு
வேளைக்கு முடிந்திடும் பணியுண்டு
வேண்டாது தொடரும் சில உண்டு!
அன்னை தந்தையர்க்கு ஆற்றுவதும்
ஆண்டவன் அவனுக்காய் ஆற்றுவதும்
பின்னைப் பிறவிக்காய் செய்வதுவும்
பிறவும் பலவும் பெருநற் பணியே!
அர்ப்பணிப்பு அது எப்பணிக்கும் அவசியம்
அதுவின்றி அணுவும் அசையாத ரகசியம்
செப்பனிடாச் செய்பணி சேர்விடம் சேராது
செய்வோர்க்கு தெரிந்தால் சிறக்குமே ஊரது!
நாட்டு நலனுக்காய் நற்பணி செய்தோரும்
நமக்கென தம் இன்னுயிரை நயந்தோரும்
ஏட்டினில் என்றும் மாறாது இடம்பெறுவர்
எல்லோர் இதயத்திலும் ஏறிநிதம் வாழ்வர்!
நன்றி
மதிமகன்