சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 165
08/03/2022 செவ்வாய்
“திமிர்”
தரணியில் தாமே பெரிதென்பர்
தப்புக் கணக்கும் போட்டிடுவர்
தலையும் விரித்துப் படமெடுப்பர்
தரங்கெட்ட திமிர் தாங்கிடுவோர்!

தேவைக்கு அதிகமாய்ச் சேர்த்திடுவர்
தேடியதைத் தெருவெலாம் காட்டிடுவர்
தேவையிலாத் திமிரும் கொண்டிடுவர்
தேய்ந்திடும் பெயரும் தாம் உணரார்!

தலையில் கனமும் கொண்டிடுவர்
தரவுகளில் தாமே நிறைவென்பர்
தமக்குத் தாமே புள்ளி யிடுவர்
தயவின்றி திமிருடன் உலாவருவர்!

அழகு தம்மிடம் நிறையவென்பர்
அதனால் ஆணவம் கொண்டிடுவர்
அகிலத்தில் தாமே முதலென்பர்
அடங்காத் திமிர் அடைந்திடுவர்!

திமிர்கொண்ட உள்ளம் தள்ளாடும்
தீச்சுவாலை போல் தினமும் சுடும்
தீதெனும் குப்பையில் சேர்த்துவிடும்
தீண்டினாலே சுட்டு எரித்தும் விடும்!
நன்றி
மதிமகன்