சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 163
22/02/2022 செவ்வாய்
“சாந்தி”
முகிழ்ந்த மொட்டு விரிந்திட்டால்
முல்லைக் கொடியும் சிரித்துவிடும்!
மகிழ்ந்து மனது திளைத்திட்டால்
மனதில் சாந்தி கிடைத்து விடும்!

மனதில் பதிந்த மங்கை யவள்
மனைவி யானால் மகிழ்வு வரும்!
கனவு யாவும் பலித்து விடும்
காத்திர மான அமைதி வரும்!

மழலைக் குரலைக் கேட்டதுமே
மனது மிகவும் அமைதியுறும்!
ஆழிக் கடல் அலையது போல்
ஆடும் மனது சாந்தி பெறும்!

கலையே மனித மனத்தினது
கவலை தீர்க்கும் மருந்தாகும்!
அலையும் மனத்தின் இடர் நீக்கி
ஆழ்ந்த அமைதி தந்துவிடும்!

காயம் பட்ட மனங்களுக்கும்
காலம் மாறும், காயம் தேறும்!
கொரோனா நோயும் தீர்ந்துவிடும்
கோலோச்சச் சாந்தி மீள வரும்!
நன்றி