சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 161
08/02/2022 செவ்வாய்
தலைப்பு: சுயவிருப்பு
“இது புது அழகு!”
கருவண்டுக் கண்ணழகு
கார்வண்ணக் குழலழகு
பிறைபோலும் நுதலழகு
பேதையின் பேச்சழகு!
கோவை இதழழகு
கோதை இடையழகு
ப.வையின் கவியழகு
பாமுகம் அரங்கழகு!
சங்கமக் கழுத்தழகு
சடையினில் பூவழகு
பொங்கல் நுரையழகு
பூவைக்கு உடையழகு!
சேலைக்குக் கரையழகு
சோலைக்குப் பூவழகு
பாலைக்குப் பழமழகு
பாலுக்குச் சுவையழகு!
முல்லைப்பூ பல்லழகு
முழுமதியின் முகமழகு
சொல்லுக்குப் பொருளழகு
சோர்வில்லா நடையழகு!
இரண்டிற்கு ஒன்றழகு
இளமைக்கு சிரிப்பழகு
பிரண்டைக்கு தண்டழகு
பிரமனுக்குத் தலையழகு!
நன்றி
மதிமகன்