சந்தம் சிந்தம் சந்திப்பு
வாரம்: 159
25/01/2022 செவ்வாய்
பரவசம்
அடக்கமுடியா மகிழ்ச்சி
ஆத்மாவை வருடிவிட
முடக்கமின்றி நெஞ்சில்
முளைவிடுமே பரவசம்!
பல நாளாய் கெஞ்சியும்
பகராத அன்பு வார்த்தை
எதிர்பாராத நேரமதில்
உதிர்த்தாலே பரவசமே!
ஒருதலையாய் காதலில்
ஒன்றித் தவித்திருக்க
மறுபக்கம் பச்சையானால்
மலர்ந்திடுமே பரவசம்!
எழுதிய நூலொன்றின்
எழிலான அரங்கேற்றம்
கழுத்துவரை சென்றுள்
களிக்கவரும் பரவசம்!
பாலைவனப் பாதையிலே
பச்சைத் தண்ணீர் ஒன்றே
காணாத இன்பமாய் பெரும்
களிப்பாய் வந்த்டும் பரவசம்!
கடவுளைத் தேடித்தேடி
களைத்த ஒருவன் அவனை
நேராகக் கண்டுவிட்டால்…
நிலைத்துவிடும் பரவசமே!
நன்றி
மதிமகன்