சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 157
11/01/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
ஓர் விசித்திர விவாதம்
கறுப்பு நிறமான
உந்தன் மேனி!
கணக்கின்றி நீயும்
உயர்ந்திடும் பாணி!
பொருக்குக் கவசத்தால்
உடலினை மூடி
போருக்கு வாறியே
நீ ஒரு பேடி!
நீயும்தான் எட்டாமல்
உயரும் ஏணி!
நெஞ்சில் உண்டோ
உனக்கேதும் திராணி!
பாயும் அணிலெல்லாம்
உன்மீது தாவி
பறித்திடும் இளநீர்
வட்டினுள் ஏறி!
அடடே கருக்கு
உன்கையில் இருக்கு!
அப்படி அதிலே
உனக்கென்ன விருப்பு!
பட்டதும் எனக்கு
பட்டென்று கடுக்குது!
பாவியே அதை நீ
பக்கமாய் வீசிடு!
உனக்கோ தலையிலே
ஒரு கொள்ளை முடி!
உலாஞ்சியே உன்னை
வீழ்த்திடும் போடி!
உனக்கே சூனியம்
வைக்கிறாய் தேடி!
உன் கால் தாங்குமா
உன்னையே பேணி!
காலுக்கு இறைத்த
கலங்கலான நீரை
கற்கண்டுச் சுவையாய்
கொடுப்பதை பாராய்!
வாயாலே நீ மேலும்
உளறாமல் வாழ்வாய்!
வைதிடுவேன் உன்னை
நீயதை உணர்வாய்!
நானும்தான் நுங்கும்
கள்ளும் தருகிறேன்!
நாட்டினில் யாருமே
நமக்கேதும் தருகிலர்!
வீணாக ஒருபோதும்
விளக்கமின்றிப் பேசாதே!
விரயமாகும் நேரம்
விளங்கிடு பெண்ணாளே!
நன்றி
“மதிமகன்”