சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-156
04/01/2022 செவ்வாய்
“இலக்கு”
வருடத்தில் ஒரு முறை
வருமே புதுப் பிரதிக்ஞை!
வாழ்ந்திடும் அவற்றில் சில
வலுவிழந்து போகும் பல!
தூய்மை உள்ள பிரதிக்ஞை
துளியேனும் விலகா நிற்கும்!
காயாகிப் பழமாகாமல் சிலவும்
கருகிய பூவாய் அற்றுப் போம்!
இனியில்லை சிகரெட் என்பர்
இன்று மட்டுமே மது என்பர்
அடுத்த நாளே எல்லாம் போக
அடிப்படியில் இறங்கி நிற்பர்!
பெற்றோரை மறவோம் என்பர்
பிறவிப் பயனே அதுவே என்பர்
கற்றவரை மதிப்போம் என்பர்
கடுகதியில் எல்லாம் மறப்பர்!
என்னுள்ளும் ஒரு பிரக்திக்ஞை
எப்போதும் நெஞ்சில் வாழ்ந்து
என்னூர்க்கு உதவத் துடிக்கும்
இந்த வருடமும் அது நீடிக்கும்!
நன்றி
“மதிமகன்”