சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:220
02/05/2023 செவ்வாய்
“நடிப்பு”
திரையில் காணும் நடிப்பு,
திரையின் பின்னே மறப்பு!
உரையில் எழுமே துடிப்பு,
உணரோம் இந்த நடிப்பு!

கண்டதும் கைகூப்பி மதிப்பு!
கனலும் மனதில் வெறுப்பு!
கிண்டலும் கேலியும் உவப்பு!
கீழான இழிநிலை நடிப்பு!

காட்சியில் காணும் வேடம்,
கலைத்துப் பின்னோர் பாடம்!
ஆட்சியில் அமர்வோர் கூடம்,
அமைப்பார் நாளொரு பீடம்!

காலையில் நீயோ மனுக்ஷன்,
காண்பவர் போற்றும் புருக்ஷன்!
மாலையில் நீயோர் அசுரன்,
மயக்கிடும் போதைக் கரசன்!

மேடையில் சொல்லின் செல்வன்,
மேய்ந்திடும் பசுந்தோல் கள்வன்!
ஆடையில் அழகூர் முருகன்,
ஆள்கையில் அவனே அசுரன்!

அசலை அறியும் சொலமன்கள்,
அவனியில் ஒன்று சேருங்கள்!
நகலைத் தூக்கி வீசுங்கள்!
நாணய உலகை காணுங்கள்!
நன்றி
மதிமகன்