சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 215
21/03/2023 செவ்வாய்

“விடியல்”
————
இரவு ஒன்று கழியும்!
இனிய காலை விடியும்!
உளவு பார்த்த நிலவும்,
உரிய ஓய்வு காணும்!

அலகு நீண்ட குருவி,
அமரும் மலரை மருவி!
விலகி நழுவும் தேனி,
விரையும் மஞ்சள் பூசி!

கண்ணை உரசிக் கமலம்
கைகள் நீட்டி அமரும்!
அண்ணல் வருகை புரியும்!
அவனி எல்லாம் மகிழும்!

விடியல் வந்து போகும்!
விளக்கும் எரிந்து தீரும்!
குடிகள் செய்த பாவம்,
குறைவே இன்றி நீளும்!

என்று எமக்கு விடியலென,
ஏங்கும் இதயம் துவளும்!
இன்று அல்ல நாளையென,
இழுத்தே காலம் தவழும்!
நன்றி
மதிமகன்