சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 260
09/04/2024 செவ்வாய்
“பணம்”
அச்சிட்ட தாளாயும் அமைந்திடும்
அரசினர் படங்களும் சுமந்திடும்
வைச்சிட வங்கியும் இடம்தரும்
வந்திட வம்சமும் செழித்திடும்

வட்டியும் குட்டியும் போட்டிடும்
வாங்கிடும் வாயையே கட்டிடும்
பட்டியும் தொட்டியும் பாய்ந்திடும்
பாதாள உலகைத் துளைத்திடும்

ஓலையை ஓடுகளாய் மாற்றிடும்
ஓரிரவில் உன்னை உயர்த்திடும்
பாலையை பசுமையாய் காட்டிடும்
பாரெலாம் உன்புகழ் படர்ந்திடும்

நல்லன செய்யவும் தூண்டிடும்
நலமற்ற வழியையும் காட்டிடும்
அல்லது செய்திடில் அழித்திடும்
ஆனந்த வாழ்வதை சிதைத்திடும்

தொல்லை துன்பம் துடைத்திடும்
தோழமை, நட்பும் துளிர்த்திடும்
எல்லையும் தாண்டிட வைத்திடும்
ஏழ்மையே திரும்பிடச் செய்திடும்

பணமுனை கெடுக்காது பார்த்திடு
பவ்வியமாய் நீயிங்கே வாழ்ந்திடு
குணமதும் கல்வியும் சேர்த்திடு
கொடுக்க இரட்டிக்கும் தெரிந்திடு
நன்றி
“மதிமகன்”