சந்தம் சிந்தும் கவிதை

பாவை.ஜெயபாலன்

“பிறந்த வீடு”
பன்னாலை எல்லையோடு இருந்த வீடு
பல காலம் ஆறு அறையாய்
அமைந்து நீடு
பின்னாளில் சித்தியினால்
அறைகள் இரண்டு
பெரிதாகி தலை வாசல்
கூரை ஓடாய்
முன்னாலும் அருகாயும்
ஒழுங்கை ,றோட்டு
மூன்று ஏக்கர் சுற்றளவு
முளுமைக்குள்ளும்
அம்மம்மா அம்அப்பா வழியிலான
அயலான மாமி சித்தி
பெரியம்மா மார்.

*எங்களுக்கும் சித்திக்கும்
பங்காய்வீடு
இரு குடும்பம் ஒரு பானை
சோறாய் நீடு
பொங்கிவரும் மல்லிகை பூ
பந்தல் ஊடு
பொலிவான நறும் வாசம்
மாலை மங்க
அங்கதனை சுற்றிலுமாய்
நீள் விறாந்தை
அமைந்த மனை
அம்மம்மா தந்தை கட்டி
தெங்கு முதல் கமுகு வாழை
பயன் தருக்கள்
திகழ்ந்த மனை சுற்றிலுமாய்
பரப்பு பத்தில்.

** அம்மாவின் கல்யாண கன்னிக்காலாம்
ஆங்கிருந்த அடிபருத்த
முள் முருக்கை
தின்பதற்கு தினம் வாழை
தோடை கொய்யா
தினம் சொரியும் பழ மரங்கள்
முருங்கை கீரை
இன்ன பிற மரக்கறியும்
விளையும் காணி
இரை பொறுக்கும் முற்றத்தில் கோழிக் கூட்டம்
முன்புறமாய் கொட்டிலுக்குள்
ஆடு மாடு
முட்டை,பால் ,மோர் தயிர்க்கும் பஞ்சம் இல்லை.

“அன்னக்காத்தை என்றழைத்து அயலார் கூட்டம்
அன்றாடம் வரும் தினமும்
அப்பம் சுட்டால்
தின்ன வரும் பின் வளவு கடவை யாலே
தேவி மச்சி இட்லி சட்னி எண்ண
இன்னமும்தான் நா ஊறும்
சொந்தம் சுற்றம்
இருந்த வாழ்ந்த பரம்பரை
பிறந்த வீட்டை
இன்றும் எண்ண வரும் ஏக்கம் நெஞ்சால் பீறி
இன்று அது போராலே
இடிந்து பாறி.
ப.வை.ஜெயபாலன்