சந்தம் சிந்தும் கவிதை

பால தேவ கஜன்

உயிராக நேசித்த தாய் மண்
தகுதியிழந்து தராதரமிழந்து
தறுதலைகள் கட்டுக்குள்
கதிகலங்கி நிற்கும் நிலை கண்டு
நெஞ்சத்தில் தீ! மூண்டதடா.

ஆவாவும் மாவாவும் ஆட்டம்
அதை அடக்க
ஒருவருக்குமில்லை நாட்டம்.
அரசியல் வாதிகளுக்கோ
பதவிகள் மேல் நாட்டம்.
மக்களோ பெரு வாட்டம்.
தேர்தலுக்காய் ஒரு கூட்டம்.
தேவை கேட்டால்
தெறிக்க ஓட்டம்.
எங்கள் தேசத்து நிலை காண
தேகத்தில் தீ! மூண்டதடா.

காவலுமில்லை
கட்டுப்பாடுமில்லை
ஒற்றுமையாய் பயணிக்க
ஒருவருக்கும் மனமுமில்லை
இதில் எங்கே நாம் உரிமை! பெற
எத்தனை எத்தனை தியாகங்கள்!
அத்தனையும் பயனின்றி
போனதை எண்ண எண்ண
நெஞ்சத்தில் தீ! மூண்டதடா.

தாறு மாறாய் கடனை வாங்கி
கூறு கூறாய் நாட்டை விற்று
பேறு இன்றி ஆக்கிவிட்டான்
கூறுகெட்ட சிங்களவன்.
தேறிவர தென்புமில்லை
தேற்றிக்கொள்ள தேர்ச்சியுமில்லை
வீழ்ச்சி நோக்கிய திசையில்
விரையுதெங்கள் நாடு
விடுதலை என்ற திண்ணம்
மூண்ட தீயில் அழிந்த காடாய்
வண்ணம் இழந்தே கிடக்கு.