சந்தம் சிந்தும் கவிதை

பால தேவகஜன்

பல்லுயிர் குடித்த
பல் குழலோசை
உள்ளிருந்தென்னை
உலுப்புதே இன்றும்.
எத்தனை தடவை
ஏவினான் பாவி
அத்தனை தடவையும்
அழிந்ததே மீதி.

பல் குழலோசைகள்
பல்லுயிர் குடிக்க
அழு குரலோசைகள்
அண்டத்தை கிழிக்க
அடுக்கடுக்காய் எம்மவர்
குத்துயிராய் கிடக்க
தாமதிக்க மனமிருந்தும்
தறிகெட்டு வந்துவிட்டோம்.

எமை காப்பாற்றும் வேகத்தில்
கால்கள் அதுவாய் நடக்க
காயம்பட்ட உறவுகள்
கதறியழும் ஓசையில்
மனம் மிச்சம் கனக்க
கடக்க வேண்டிய கட்டாயத்தில்
கடந்தே வந்துவிட்டோம்.

பல் குழலோசைகள்
பயத்தினை கூட்ட
பார்த்த இடமெல்லாம்
குருதிதோய்ந்த அவயங்கள்
அங்காங்கே சிதறி கிடக்க
அடங்கா பெருவலியோடு
அழுதுகொண்டே வந்தோம்.

பக்கத்தில் வந்தவரை
பள்ள நிலத்தினிலே
புதைத்து விட்டு
உள்ள குமுறலோடு
பதுங்கு குழிக்குள்
பதுங்கியே கிடந்தோம்.

எங்களின் உயிர் காக்க
பாய்ந்தெழுந்த புலிவீரன்
குண்டுபட்ட காயத்தோடும்
நின்று போராடி
நிலத்தினில் வீழ்ந்திட்ட
நிலைகளை கண்டு
நிம்மதி இழந்தே வந்தோம்.

மீதமான உறவுகளோடு
மீண்டு வந்தோம்.
மீண்டும் வாழப்பிடிப்பின்றி
சலித்து நின்றோம்.
சொந்த ஊர் பிரிந்து
சோர்ந்து போனோம்.
செய்வதறியாது
ஓய்ந்துமபோனோம்.

அடைக்கலம் தேடி
அலைந்து அலைந்து
அகதி என்ற அந்தஸ்தோடு
அவதிப் பட்டோம்.
வாழ வழிகளுமின்றி
வலுவிழந்து போனோம்.
துன்பச் சுமையோடு
துவண்டு போனோம்.

நச்சுப் புகைகளின்
விசத் தன்மை
நம்முயிர்களை குடிக்க
இரத்த வாடை
இதயத்தை அறுக்க
பிணங்களின் குவியல்
மனங்களை வெறுக்க
போட்டது போட்டபடி
உடுத்திய உடைகளுடன் ஒன்றுமில்லாமல்
ஒருவர் பின் ஒருவராக
ஒழிந்து கொண்டும்
ஒதுங்கிக் கொண்டும்
வலிகளோடு வந்துவிட்டோம்.

மாயக் கண்ணனின்
குழலோசையும்
எம்மவர் உயிர்குடித்த
பல் குழலோசையில்
மொளனித்தே கிடந்தது.
உரிமைக்காக ஓங்கிய
உலகத்து குரலோசைகளும்
எங்கள் உரிமைகள் பறிக்கப்படும்போது
அடங்கியேகிடந்தது.