சந்தம் சிந்தும் கவிதை

பால தேவகஜன்

ஊரே உனை நினைக்க
உள்ளே கண் நனைக்கும்
வேரை பிரிந்த மரமாய்
உறவை பிரிந்து நானும்.

உழைப்பை தேடி வந்தேன்
உழைப்பில் கொஞ்சம் உச்சம்!
உள்ளத்தில் ஏனோ அச்சம்!
மிச்ச வாழ்வும் இச்சையின்றி
தொடருமோ! என்ற பெரு ஏக்கம்.

விடுமுறை நாளெண்ணி
விரல்கள் கணக்கிட
விடுதலை பெறப்போகும்
கைதியின் மகிழ்வாய்
விடுமுறைக்காய் காத்திருப்பேன்.

ஊருக்கு போவதையெண்ண
புன்னகையால் முகங்கள்
சந்தோசம் ததும்பி வழியும்
மனங்களில் நிறைவாய்
மகிழ்வே கொட்டிக்கிடக்கும்.

பிரிந்து போன உறவுகளை
மீண்டும் கண்முன்னே
காணப்போகின்றோம்
பாசம் என்ற பந்தத்துக்குள்
படுத்துறங்க போகின்றோம்.

தற்காலிக மகிழ்ச்சியென்றாலும்
தக்க தருணம் இதுவே என்று
மனங்களில்
நாற்காலி போட்டு மகிழ்ச்சி அமர்ந்திருக்கின்றது.

பிறந்ததேசத்திலும்
புலம்பெயர்ந்த தேசத்திலும்
எம்மை வெளிநாட்டுக்காரர்
என்று அழைப்பதில் கொஞ்சம்
மனம் சஞ்சலப்படுகின்றது.

எமக்கான நாடே எதுவென்று
முடிவெடுக்க விடாமல்
வாழ்வின் நகர்வு
எங்களையும் எங்கோ
நகர்த்திக்கொண்டேயிருக்கின்றது.

ஆண்டுக்கொரு விடுமுறை
அதுவே எமக்கான விடுதலை
அந்த விடுதலை களிப்புக்களின்
இனிமைகளை சுமந்தபடி
அடுத்தடுத்த ஆண்டுகளை
கடந்திடுவோம்.