சந்தம் சிந்தும் கவிதை

பால தேவகஜன்

உப்புக் கஞ்சி
பசி போக்க
அஞ்சி அஞ்சி
ஓடி வந்தோம்!
அத்தனையும்
இழந்து வந்தோம்!
மிஞ்சி இனி போவதற்கு
கொஞ்சமும் இடமில்லை.

சனம் பட்ட பாடுகள்
மனம் விட்டு விலகாது
தினம் நின்று கொல்ல
இனம் ஒன்றின்
கனத்த வரலாறு
இதை மிஞ்சி ஆகாது.

இனவெறியாட்டம்
இது கடத்துபோகா
எங்களி் வாட்டம்.
கொத்துக் குண்டுகள்
குதறிய உடலங்கள்
குத்துயிராய் கிடந்து
துடிதுடிக்க
காக்கும் கருணையிருந்தும்
கடந்து வந்துவிட்டோம்
தாமதித்தால் எம்
தலை சிதறும் என்ற
நிலையுணர்ந்து.

பேரம் பேசி நின்ற
எங்களுக்கான வீரங்கள்
சோரம் போகாது
கோரமாய் எழுந்தன
எதிரில் நின்றவை
எத்தனை நாடுகள்
அத்தனையும் மிஞ்சம்
அஞ்சியே போயின
ஆயினும் புரியாத புதிராய்
திடமோடு நின்றவர்
மெளனித்தே போயினர்.

இரத்த பூமியில்
மரத்த எம் உணர்வு!
உறவுகளை இழந்து
வலிந்த எம் இதயம்!
உறக்கமின்றி உணவின்று
வலுவிழந்த தேகம்!
வாழ்வு முடிந்ததாய்
சலித்தே நின்றோம்.

இதமான காற்றில்
இரத்த வாடை
செங் குருதியால்
சகதியான கடற்கரை மணல்
மெளனித்து கொண்ட
விடுதலைப் போரின்
வலிசுமந்த வரலாற்றை
காலம் காலமாய்
நிரூபணமாக்கிக்
கொண்டேயிருப்பாள்
முள்ளிவாய்க்கால் அன்னை!