சந்தம் சிந்தும் கவிதை

பால தேவகஜன்

பிறந்த மனையே! உனை
மறந்து நான் போவேனோ!
இறக்கும் வரை என் நினைப்போடு
இறுகநான் பிடியேனோ!
கற்பனையில் கறந்தெடுத்து
உனக்கொரு கவியொன்று
நான் வடியேனோ?

காட்டு வயலுக்குள்ள
கறுத்தபனம் கூடலில
வெட்டிய ஓலைகளை
மிதித்து விரியவைச்சு
மாட்டு வண்டியிலே
ஏத்தி வீடுவந்து
ஓலை மட்டையென
வெவ்வேறாய் வெட்டியெடுத்து
ஓலைகளை கரம் போட்டு
படிமானம் ஆகுமட்டும்
வாரம் ஒன்று காத்திருந்து
கூரை மேஞ்ச எங்க வீடு!
ஊரே! மெச்சும் எங்க கூடு.

தாத்தாவும் பாட்டியும்
சிறுகச் சிறுகச் சேர்த்து
கட்டிய வீடு
மண் வீடு என்றாலும்
அது நம்க்கெல்லாம் பொன் வீடு
கோடையிலும் குளுகளுக்கும்
மாரியிலும் தகதகக்கும்
வண்ணம் கலையாது
எண்ணத்தில் நிறைந்த வீடு
மேச்சல் கறையான் தட்டி
வாரமொருக்கா மொழுகி
அழகுபார்த்த எங்க வீட்ட
அடிச்சுக்கவே ஊரில
வேற வீடே இல்லை.

பிறந்தமனை பெருவாழ்வு
துறந்த என் துறவறத்திலும்
மறந்து போகாது
உறைந்தே கிடக்கு
என்றைக்கும் என் உணர்வோடு.
எத்தனை எத்தனை மகிழ்வுகள்
நிறைந்து கிடந்த சொர்க்கமது
இன்று அதை இருந்த தடம் தெரியாது
ஆக்கிவிட்டதே வசதிவாய்ப்பு.
அசதிவந்தால் தூங்கிய திண்ணைகள்
வசதிவந்ததால் அழிஞ்சேபோச்சு.
நான் பிறந்தமனை
ஒற்றை விறாந்தையில்
எத்தனை உறவுகள்
வாழ்வை உச்சமாய் கடந்தன
இன்று நான் கட்டிய மனையில்
எத்தனையோ அறைகள் இருந்தும்
கூடிமகிழ்ந்திட உறவுகளின்றி
வெறுமையோய் கிடக்கின்றன.