சந்தம் சிந்தும் கவிதை

பால தேவகஜன்

மாவீரரே!

நாங்கள் வாழ்ந்த பூமியில்
நீங்கள் வாழ்ந்த
காலத்து நினைவுகள்
தினமெழுந்து அதுல்
மனம் கனத்து விழிகரைய
விரைகின்றோம் உங்கள்
கல்லறைகள் நோக்கியே.
கார்த்திகை இரவுகளில்
விளக்கொளிகளை நாடும்
ஈசல்கள் போல
உங்கள் கல்லறையில்
ஒளிர்கின்ற தீப ஒளிகளை
நாடியே நாங்கள் மெய்மறந்தபடி
ஈகப் பெருவெளியில்
மொய்து கிடக்ந்தோம்.

கடும் தியாகங்கள்
கல்லறை தளுவிய
கனத்த வலிகளின் மாதம்.
அளியா நினைவுகள்
உணர்வினை தட்ட
கல்லறை நோக்கியே
எம் கால்களும் நகர
அலை அலையாய்
திரண்டவர் விழிகள்
வான் மழையாய் சொரிய
கல்லறை நாயகர்
காவிய கீதங்கள்
வானுறை தெய்வங்களேயே
மெய்சிலிர்க்க வைக்கும்
கார்த்திகை மாதமிது.

மலர் தூவி மண்டியிட்டபடி
மகனே! மகளே!
அண்ணா! அக்கா!
என்ற பல உறவுமுறை
அழுகுரல்கள்
அண்டத்தை கிழிக்க
அடுக்கடுக்காய் ஏற்றிய
தீபத்தின் ஒளிகள்
வானிருளை கலைக்க
எங்கள் காவல் தெய்வங்கள்
கல்லறை விட்டெழுந்து
கண்முன்னே நிற்கும்
கார்திகை மாதமிது.

சுதந்திரம் வேண்டியே
சுவாசத்தை இழந்தோரே!
மழைபொழியும் கார்த்திகையில்
மடை திறந்த வெள்ளம்போல்
உள்ளிருந்த உள்ளத்து வலிகள்
ஒன்றாகப் பெருகி உங்கள்
துயிலுமில்லங்களில்
ஒருமித்துக்கொள்ளும்
கார்த்திகை மாதமிது.

ஆராதனைகள் காட்டி
ஆறாத வலியாற்றும்
மொளனித்த கணங்களில்
காற்றில் கலக்கும்
கற்பூர வாசனைபோல்
ஈழம் முளுவதும்
உங்கள் ஈகங்களின்
வலிமை பரவிக்கொள்ளும்
கார்திகை மாதமிது.

மண்ணின் மடியில் மழையென
வீழ்ந்து சிதறும் கண்ணீர்துளிகள்
வித்துடல்களை தாங்கிய
விளைநிலங்களை ஈரப்படுத்தி
விதையாக விதைத்த
வித்துடல்களை மீண்டும்
முளையாகக் கண்டு
தொழுதிடத்துடிக்கும்
கனத்த கார்திகை மாதமிது.

மறவோம் மறவோம்
மாவீரரே! உங்களை
என்றும் மறவோம்
உங்கள் தியாகத்தில்
மிளிர்ததுதான் எங்கள் வாழ்வு.
எமக்காக உருகிய உங்களை
இஸ்ட தெய்வமாக ஏற்று
என்றும் தொழுதே நிற்போம்.
கடவுளை கண்ணால் கண்டவர்கள்
ஈழத்தமிழர்கள்
என்றைக்கும் நீங்களே
எமக்கான கடவுள்கள்
உங்களை போற்றி வாழ்வதே
எமக்கான பெரும்பணி.