சந்தம் சிந்தும் கவிதை

பாலா தேவகஜன்

தோன்றி மறைகின்ற
நீர் குமிழியாய்
தொலைகிறதே எம் வாழ்வு!
ஊன்றிய இடத்தில்
சுதந்திரம் இல்லையென
ஊரூராய் அலைந்தோம்
வேண்டிய கடவுளரும்
விடைதரவில்லை
தாண்டியவை எதிலும்
பிடிப்புக்களும் இல்லை.

அடக்கு முறைகளுக்கும்
அதிகாரத்துக்குள்ளும்
அவதிப்பட்டு அவதிப்பட்டு
காற்றின் விசையில்
அலையும் நீர்க்குமிழியாய்
நாம் காலத்தின் விசையில்
ஊரிழந்து உறவிழந்து
அகதியானோம்.

எங்கள் நிஜத்தினை இழந்து
அன்னிய தேசங்களில்
தொடுவானம் போல
நிறைவின்றி நிலையானோம்.
நீர்குமிழி வாழ்க்கை
நிறையவே ஆசை
உறவென்ற ஒன்றுக்காய்
எமக்கான உணர்வுகளை
இழப்போம்.

கன கனவுகளை நிறைக்கும்
கடினமான வாழ்க்கையிது
கனவுக்குள் வாழ்ந்து
கனவுக்குள் செத்து
நாமக்காக நாம்
வாழத்தொடங்கும் முன்பே
நீர் குமிழியாய் உடைவோம்.

எதிலுமில்லை பிடிப்பு
ஏன்? இந்த வாழ்க்கை
என்ற எண்ணம்
எங்கள் திண்ணங்களை
உடைக்கும்.
வாழ்வின் வண்ணங்களை
கலைக்கும்.
புரியாத வாழ்வுக்குள்
புகுந்து விட்டோம்
பொறுமையோடு கொஞ்சம்
கடந்திடுவோம்
நாம் வாழாவிட்டாலும்
நம் தாய்மண் வளமாகட்டும்.
நன்றி
பால தேவா