சந்தம் சிந்தும் கவிதை

பாலதேவகஜன்

பிள்ளை கனியமுதே

பெரு வரமாய் நீ! பிறக்க
மெருகியதே என் வாழ்வு
கருகியெனி போகமாட்டேன்
உனதன்பில் உருகினின்று
உயிர் வாழ்வேன்.

கனவுக்குள் நான் வாழ்ந்த
காலங்களை கரைத்தவளே!
உன் கனவே நானென என்
கரங்களில் தவழ்பவளே!
என் காயமும் தியாகமும்
உனக்காகவே தானம்மா!

உன் மழலை குரலாலே
குறுகிய என்பெயரை
குறுக்கி நீ கூப்பிடும்போது
மீண்டும் மீண்டும் நீ
கூப்பிட வேண்டுமென்று
வேண்டுமென்றே கேட்காதவனாய்
நடித்துக்கொண்டேயிருப்பேன்.
அந்த ஒற்றை குரலை
என் வாழ்நாள் முழுவதும்
நான் கேட்டிட வேண்டும்.

உன் பிஞ்சு கால்களால்
நீ என் நெஞ்சை
உதைந்திட்டபோது
நான் உணர்ந்த இன்பம்
இவ்வுலகினில் வேறெங்குமில்லை
என் செல்ல கண்மணியே!