வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

23/03/22 வியாழன் கவிதை இல( 54)
துளி நீர்
நீரின்றி உலகு அமையாது -துளி
நீரின்றி உயிரும் வாழாது
தவித்த வாய்க்கு துளி நீரின்றி
ஏங்குது வையகம் அமைதியின்றி

சுந்தரமாய் திகழ்ந்த சுதந்திர பூமியில்
குளிர் நீரோடையருகில் நிழல் தரும் மரங்கள்
ஆதி மனிதன் ஆனந்தமாய் -நீரை
அள்ளிப் பருகினான் தாகம் தீர்த்தான்.

பனித் துளி ,புல் நுனியில் பள பளக்க
புள்ளினங்கள் கூடியங்கே இதமாய்ப் பருக
கடலில் விழுந்த மழைத் துளியுமே
விளையுது வெண் முத்தாய் சிப்பிக்குள்ளே

இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மனிதன்
நாகரீக வளர்ச்சி கண்டு மடமை கொண்டு
மரமறுத்து,நதி மறிக்க ,நிலம் வறள நீரும் வற்ற
காற்று மழையின்றி பூமியும் சூடாக

குடி தண்ணீருக்காய் தொலை தூரம் நடந்து
பாத ரேகை தேயுது மனிதனுக்கு
கால்நடை ஏங்குது தாகம் தீர்க்க
பயிர் பச்சை சோருதெங்கும் துளி நீருக்காய்.