சந்தம் சிந்தும் கவிதை

நாதன் கந்தையா

சுடர்.
***************

இரண்டாயிரத்து எட்டு
பத்தாம் மாதம்.
இடம்பெயர்ந்து
வெளிக்கிட்ட கந்தையா
மனைவி சகிதம்
வீட்டை விட்டு கிளம்பினான்.

வெய்யில் மழை வறுமை.
வயிற்று பசி நடக்க விடாமல்
முடங்க சொன்னது.
எறி குண்டும் ரவைகளும்
இராணுவ விமானமும்
இருக்க விடாமல் விரட்டியது.

கூவி குரலெடுத்து அழுதான்.
எவரும் திரும்பி பார்கவில்லை.
சத்தியாகிரகம் இருந்தான்.
கந்தையாவை கைவிட்டு
மக்கள் இடம் பெயர்ந்து
அடுத்த ஊருக்கு போய்விட்டனர்.

வழியில் அரச மரத்தின் கீழ்
பிள்ளையார் ஓடவில்லை
செகசோதியாக வீற்றிருந்தார்.
குப்புற விழுந்து மண்டியிட்டு
கற்பக வினாயகா
காத்தருள் என்று கதறினான்.

வெடிச்சத்தம் கேட்டது
பிள்ளையாரே பிள்ளையாரே
சொல்லிக்கொண்டே ஓடினான்.
ஐந்து மாதம் கடந்து போனது
செல் விழுந்து செத்துபோனான்
கந்தையா.
தப்பி பிழைத்தவள் மனைவி மட்டும்.

தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டு
விடுப்பு பெற்று
வெளியே வந்தாள்.
வயிற்று கொடுமை
தெருவில் இறங்கி
பிச்சை எடுத்தாள்.

மத்தியானம் உச்சி வெய்யில்
கதசாமி கோவில் மணி அடித்தது.
வயிற்று பசி.
பூசை நடக்குது
பொங்கல் வாங்கலாம்
கோவிலுக்கு போனாள்.

மூலவராக முருகன்.
மண்டபத்தில் பிள்ளையார்.
எண்ணெய் பிசுபிசுக்க
கரு கருவென திரட்சியாய் இருந்தார்.
மோதகம் கொழுக்கட்டை படையல்
ஊதுபத்தி புகைந்தது.

தூண்டாமணி விளக்கில்
எண்ணெய் முடிந்துபோய்
திரியில் எரிந்த “சுடர்”
கந்தையாவின் கடைசி நேரம்போல
படபடத்து துடித்தது.

பாய்ந்து வந்து
எண்ணெய் வார்த்தான்
பக்தன் ஒருவன்
சுடர் அணைந்து போனால்
அபசகுனமாம்…
ஊருக்கு கூடாதாம்…

கந்தையாவின் மனைவிக்கு
வெறுப்பாய் இருந்தது.
பொங்கல் வாங்கவில்லை
விறு விறென்று வெளியேறினாள்
தெருவில் போய் பிச்சை எடுக்க.

-நாதன் கந்தையா-