சந்தம் சிந்தும் கவிதை

நாதன் கந்தையா

தவிப்பு..

சட்டென என்னிடை
அன்றைய ஞாபகம்
பிறப்பிடம் நோக்கி திரும்பி ஒருநடை.
கண்களை மூடி காலம் அளந்து
நெஞ்சிடை விஞ்சிய தவிப்பு மேவிட
கண்ணிடை நிமிர்ந்தது
அன்றைய பொழுதுகள்.

முள்ளிவாய்க்கால் அது ஒரு
பெருங் கதை…
முகிலும் அமிலமும் முகமன் செய்திட
பூமியில் மானுடம்
புலம்பிய பொழுதுகள்.

கல்லெறி தூரமாய் காலம் கடந்தது
கால் நூற்றாண்டின் பாதிநாள் கழிந்தது
வஞ்சகம் சூதும் வளைந்து நிமிர்ந்து
வலைஞர் மடத்து
நினைவுகள் திரும்பின.
நெஞ்சிடை ஆணி அடித்ததுபோல
நினைவிடை தவிப்பு நின்று துடித்தது

பள்ளம் தோண்டினால்
எலும்பாய் கண்டோம்.
பார் முழுதாயிரம்
செய்திகள் சொன்னோம்.
கள்ளரும் கபடரும் எம்மிடை கலந்து
காலடி நிழலாய் தொடர்ந்திடக்கண்டோம்.
பன்னிரண்டாயிரம் தாலி அறுந்தும்
பாகப்பிரிவினை
கொண்டே அலைந்தோம்.

மண்புழு எல்லாம் செத்து மடிந்தது.
மரம் செடி புல்லும் கருகி எரிந்தது.
கண்ணிடை காணா ஈக்கள் அழிந்தது.
கால் தூக்கி வைத்தால்
கண்ணி வெடித்தது.
கந்தகப்புகையினை நெஞ்சினுள் வாங்கி
கஞ்சி குடித்தொரு காலம் கடந்தது.

நெஞ்சினில் குண்டினை
கொண்டவர் போக
எஞ்சிய சிலவும் செவிடொடு குருடாய்…
கால்கள் இழந்து கையும் முறிந்து
தெருவழியோடி சேற்றிடை உறங்கி
ஆண்டுகள் ஓடி அகன்று மறைந்தும்
எஞ்சிய நாங்களும் இருபடக்கண்டோம்.

தன்வழி காலம் கதையை முடித்திட
எஞ்சிய நிழலாய் படர்ந்து விரிந்து
ஏமாந்தமாக மிஞ்சிய தவிப்பு
நெஞ்சுள் அடைத்து நிறமது மாறி
அன்றைய ஞாபகம்
சேடம் இழுத்தது.

-நாதன் கந்தையா-