சந்தம் சிந்தும் கவிதை

நாதன் கந்தையா 16.5.23

பெற்றவள்.
————————-
மீண்டு புவிமீது
வெண்மதியாய் வலம்வந்து
கூண்டாய் மடியிருத்தி
கோதி முலையூட்டி
வானைப்போல்
வளியைப்போல் – என்
வலம் இடம் அறிந்தவளே.

விஞ்ஞானம் மெய்ஞானம்
எஞ்ஞானம் என்றாலும்
உன் ஞானம் ஒன்றேதான்- என்
உள் நெஞ்சுள்
ஓங்காரம் ஆனவளே.
மெல்லத்திருவாகி
மேவி நின்ற பொற்பதமே.

மண்ணில் நடைபயின்ற
மாலை குளிர் காற்றே
மலராய் சந்தனமாய் -என்
மண்டைக்குள் மணப்பவளே.
தண்ணீருள் கலந்த
பிராணன்போல் என்னுயிரில்
பின்னி பிணந்துவிட்ட
பெரும்பேறே பொக்கிசமே.

மூலம் நீயானாய்
முழுவதுமே நீதானே
காலத்தும் கடைசிவரை
காணிக்கை இல்லாமல்
காட்சி தந்த
கலைமகளும் நீதானே
தாயே தலை மகளே
தாள் பணிந்தேன் என்னுயிரே.

-நாதன் கந்தையா-