சந்தம் சிந்தும் கவிதை

நாதன் கந்தையா

= நாதம்=
**********

மூங்கிலின் குழல் நுழைந் தொழுகிடும் நாதம்
மோகன மென்றது என்னிடை சேரும்.
முற்பகல் சோலையில் குயிலது கூவும்
மெல்லினம் என்றதைச் சொல்லிடக் கூடும்.

என்னவள் இடை நசிந் தேகிடும்போது
சில்லிடும் கொலுசது மெல்லிய நாதம்
புல்லிடை அமர்ந்தொரு சில்வண்டு பாடும்
புரிதலும் அதுவொரு கரகர கீதம்

தாங்கியோர் மலரிதழ் தே னூம்பிய வண்டு
சிற கிரைந் ததிர்வதும் அதுவொரு வேதம்
காந்தமாய் அலையென காற்றிடை மேவும்
கந்தனின் ஆலயமணி ஒரு நாதம்

காதலன் காதலி கலந் தகமகிழ்ந்து
சீரிய ஒவ்வொரு சிணுங்கலும் நாதம்
தாயவள் மார்பினில் சரிந்த குழந்தையின்
பூவிழி மூட பிறப்பது நாதம்.

-நாதன் கந்தையா-