வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

ஆற்றல்

பொங்கும் புதுமை மேலோங்க
பொலியும் ஆற்றல் புகழ்மேவ
எங்கும் பசுமை விரித்தாட
எழிலாய் வறுமை அகன்றிடுமே
தங்க குணமே கொண்டோரை
தரணி போற்றும் புவிமேலே
திங்கள் போலே நீயிருந்தால்
திலகம் மாக ஒளிமேவும்

ஆற்றல் ஒன்றே அகிலத்தில்
அனைத்தும் திறமை வளர்த்திடுமே
ஊற்றாய் எண்ணம் உலகாள
உரமாய் சீர்மை நிலைத்திடுமே
நாற்றாய்க் கலைகள் வளர்ந்தோங்க
நதியாய் பெருகும் நுண்ணறிவு
போற்றி நாமும் பொழுதெல்லாம்
பொன்போல் அறிவை தேக்கிடுவோம்.

கற்ற கல்வி கணக்கின்றி
காலம் வரையும் கணக்கினிலே
உற்ற காலம் படித்துநாமும்
உயர்வாய் மதிப்பைப் பெற்றிடுவோம்
பெற்ற பெருமை உலகினிலே
பேதம் இன்றி தளிர்த்திடவே
நற்ற தவமாய் கற்றைநெறி
நயமாய் ஆற்றல் செதுக்கிடுமே

நகுலா சிவநாதன் 1718