சந்தம் சிந்தும் கவிதை

நகுலா சிவநாதன்

தமிழே வாழி

அன்னைத் தமிழே அகிலம் போற்ற
ஆற்றல் படைத்து எழுந்தாயே
முன்னைத் தமிழாய் மூத்தோர் வளர்த்த
மன்னு புகழே செந்தமிழே
கன்னித் தமிழாய்க் காலம் வரைந்து
கணினித் தமிழாய் உருவானாய்
என்னை வளர்க்கும் இன்ப மொழியே
ஏற்றம் காண்பாய் புவிமேலே
உயிராய் எமக்கே உறவாய் நீயே
உள்ளம் மகிழப் புவியாள்வாய்
பயிராய் வளர்ந்து பலனும் தந்து
பாக்கள் வரைய உரமானாய்
கயிறாய்த் திரிந்து கணினி புகுந்து
காதல் மொழியாய் வானுயர்வாய்
அயர்வே இன்றி அமுதத் தமிழை
அவனி போற்ற வளர்ப்போமே
நெஞ்சம் நிறைந்த இனிமைத் தமிழே
நீடு புகழை அளித்தாயே
தஞ்சம் தாயே தரணி போற்றத்
தடைகள் களைந்தே உயர்வாயே
வங்கக் கடலும் வாரி யணைத்த
வண்ணத் தமிழே என்னுயிரே
பங்கம் இல்லாப் பாரில் வளரப்
பாக்கள் பாடி வாழ்த்துகிறேன்
நகுலா சிவநாதன் 1710