வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

இப்போதெல்லாம்…..

இப்போதெல்லாம் இணையமயம்
இடர்கள் இன்றி ஓடுது பார்!
தப்பாய் எல்லாம் நடக்குது பார்
தரணி மேவி பெருகுது பார்
உப்பே போட்டு உண்ட உணவு
உப்பே இல்லா உணவாய் இன்று
மப்பாய் சுழலும் காலநிலை
மனிதரில் வேறுபாடு இன்றே பார்!

மேதாவித் தனமாக வாழ்க்கை இன்று
மேதினி பரவி சுழலுது பார்
ஆதாயம் இல்லா வார்த்தைகள் பேசி
அவனியில் பொழுதே நகருது பார்
வேதாந்தம் பேசி வெந்தணல் மேலே
வேண்டுமென்று பழிகள் உலவுது பார்
பாதாளம் வரையும் பயன்களற்றே
பண்பாடு இல்லாச் செயல்கள் பாரீர்!

நாளைய வாழ்வு நமக்கென்று உரைப்போம்
நன்மை செய்தே வாழிட முனைவோம்
தீயமனிதர் பொறாமைத் தீயை
தீதாய் எண்ணி உயர்ந்து செல்வாய்
தூய அன்பு காட்டி நீயும்
துணிந்து செல்ல முயல்வாய் நாளை
நன்றும் தீதும் பிறர்தர வாராது
நன்றாய்ப் புரிதால் மலரும் வாழ்வு

நகுலா சிவநாதன் 1751