சந்தம் சிந்தும் கவிதை

தேவ கஜன்

காதல்

நிம்மதி தொலத்த
நிர்க்கதி வாழ்வில்
நின்றவர் கண்டேன்.
நிலைகள் தளர்ந்து
நினைவுகள் இழந்து
நின்றவர் கண்டேன்.

தாயகம் எங்கிலும்
நீங்கா வலியால்
நீளும் துயரில்
நாளும் தவிக்கும்
நிலைகளை கண்டேன்.

அகதியாய் அலைந்து
அனாதையாய் திரிந்தவர்
அழுகையை கண்டேன்.
எதிரிகள் கையில்
எங்கள் தாய்நிலம்
எரிவதை கண்டேன்.

பருவங்கள் தேடும்
பாதையை மாற்றி
பிறந்து வளர்ந்திட்ட
தாய்நிலம் போற்றி
அன்று பிறந்தது காதல்!
தாயகம்மீதினில் பெரும்
பற்றினை கொண்ட காதல்!

புத்தகப்பையினை
பள்ளியில் விட்டு
புதுவரலாறு படைத்திட
புலிப்படை சேர்ந்தேன்.
விடுதலை வேள்விக்கு
ஆகுதியாய் நின்றேன்.
அண்ணன் வித்தைகள்
அனைத்தும் கற்றேன்.

காடே எமக்கான வீடாய்
தனி நாடே! எமக்கான விடிவாய்
குண்டு மழையிடை
நின்று சமர்புரிந்தோம்.
தாயகம் மீதான காதலில்
எங்கள் காயத்து வலி மறந்தோம்.

வல்லமையில் உச்சத்தில்
எங்கள் முப்படைகள் கண்டு
வல்லரசுகள் அச்சத்தில்
எங்களை அழிக்க துடித்தது.
துணையாய் நின்றவர்களை
துரோகிகள் ஆக்கினார்
துப்புக்கள் பெற்று எங்களை
துடைத்தெடுக்க பார்த்தனர்.
இருந்தும் நாங்கள்
தணியா தாகத்தோடு
அணியாய் நின்றோம்.
இனமானம் காத்திட
இறுமாப்புடனே நின்றோம்.

நந்திக்கடல்தாண்டிய போது
எங்கள் நலிவுகள் புரிந்தன
இருந்தும் திடத்தோடு நின்றோம்.
நெறியான போரோடு
எதிரி்ல் நின்ற நாடுகள்
எங்களை எதிர்த்து நின்றிருந்தால்
நிட்சயம் நாங்களே வென்றிருப்போம்.
நின்றவர்கள் சதியோடு நின்றதினால்
சதிதெரியா எங்களுக்கு
புரியாத புதிராகவே இருந்தது.

எங்கள் தாய்மண்ணை
காத்து நின்றிருப்போம்
ஆனால் சதிவலைகளும்
சாட்சியமில்லா வதைகளும்
சரணடைந்தோர் கொலைகளும்
தப்பித்தோர் உயிருடன் புதையல்
எங்கள் வல்லமைகளை
வலுவிழக்கவே வைத்தது.

துயரங்கள் பல சுமந்து
தூரதேசம் வந்தாலும்
எங்கள் தாகம் என்றைக்கும்
தமிழீழத் தாயகமாகவே இருக்கும்
எங்கள் பற்றும் காதலும்
தாய்மண் மீதானதாகவே இருக்கும்.