சந்தம் சிந்தும் கவிதை

திருமதி செல்வி தெய்வேந்திரமூர்த்தி

வட்ஸ்அப்பில் அனுப்ப முடியவில்லை

கண்ணீர் அஞ்சலி வேண்டாம்
“”””””””””””””””””””””””””
கண்ணீர் அஞ்சலி வேண்டாம்
கவலைகள் கொள்ளவும் வேண்டாம்
கண்ணீர் இங்கொரு உடலம்
இடும்பையில் வாழ்ந்ததிச் சடலம்
விண்ணே ஏகிடும் நேரம்
வீழ்ந்து புலம்பிட வேண்டாம்
மண்ணின் மாயை யினாலே
மகிழ்ந்தார் உண்டோ சொல்வீர்!

தண்மதி கொண்டவர் கேளீர்
தணித்திடு வீரும் துக்கம்
கண்ணெதிர் காண்பதென் காயம்
கழித்த தனாலே மகிழ்ந்தேன்
பண்ணொடு பாடுங்கள் நன்றே
பரமனின் கீதங்கள் என்றே
உண்மையில் உரைத்தவள் நானே
உணர்ந்து பகிர்ந்திடச் சொன்னேன்!

காலனின் வருகைக் கேங்கி
காத்திருந்தேன் பலகாலமும் போக்கி
ஓலமும் இங்கிட வேண்டாம்
ஓங்கி யழுதிட வேண்டாம்
பண்ணுடன் பதாகைகள் தூக்கி
பார்மிசை அஞ்சலி அடித்து
எண்ணுவ தெல்லாம் எழுதி
ஏட்டிலே கொடுத்திட வேண்டாம்!

புண்படு மாறோர் வார்த்தை
புகழ்வது போலவும் சொல்லி
வண்டமிழ் அழகினைக் கூட்டி
வரிகளும் துலங்கிடு மாறு
மிண்டு மனத்து டையார்கள்
மிழற்றிடும் பொய்மொழி வேண்டாம்
தண்டுடைத் தணிகையன் பாதம்
தாவிட நேரமும் ஆச்சு