சந்தம் சிந்தும் கவிதை

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காய்
சிவமணி புவனேஸ்வரன்.
சுவிஸ்.

தலைப்பு

***தைமகளே
வருவாய்*****

மங்கலங்கள் ஆக்கி மாவிலைகள் கட்டி
செங்கரும்பின் ஓடே செவ்வாழை கட்டி
செங்கதிரும் விரிய செந்நெல்லும் பொங்கி
தங்கமகள் உனக்கே தருவிப்போம் வருவாய்

இனியவளே வருவாய் இல்லங்கள் ஒளிர
புனிதமகள் நீயும் புன்னகையை உதிர்த்து
மனிதஇனம் வாழ மகிமைகளும் காண
தனியவளாய் வருவாய்
தரணியினை ஆழ

விழிசிந்தும் நீரும் வேதனையும் ஒழிய
பழிபாவம் யாவும் பறந்தோடிப் போக
ஒழிகின்ற நெறியை ஒழியாமற் காக்க
அழியாத செல்வம் அழியாமற் காக்க.

தைமகளே வருவாய் தங்கிநின்றே காப்பாய்
கைவளையல் குலுங்க கரம்குவித்தோம் வருவாய்
செய்யவளே வருவாய் செழிப்பாக்கித் தருவாய்
வெய்யவனை அழைத்து
விருப்போடே வருவாய்.

***______***