சந்தம் சிந்தும் கவிதை

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

*** பட்டினி***

உருண்டு ஓடும் உலக வாழ்வினில்
உவகை ஒழிந்து ஓடக் கண்டோம்
திரண்டு நாளும் திரவியம் வாங்க
தேடித் தேடி நிதம் அலைகின்றோம்
இருண்டே போகுமோ எங்கள் நாடும்
இல்லாமை என்றும் இருப்பிடம் ஆகுமோ
வரண்டே போகுமோ எங்கள் வயிறும்
வாழ்வும் இதுவே என்றே ஆமோ

குட்டிக் குழந்தைக்கு குடிக்க கொடுக்க
புட்டிப்பால் இல்லாப் புவனம் பிறந்தது
தட்டுப்பாடு தரம்தரமாய் பெருக
கட்டுப்பாட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓட

தேடிய தேட்டம் ஓடி ஒழிந்து
கோடி விலையால் கொள்ளை போகுதே
வாடிய மனங்கள் வலு இழக்க
ஆடியே வாழ்வும் ஆட்டம் காணுதே

பண்டைய கால வாழ்வை ஆக்கி
பழுதிலா நிலத்தை உழுது விதைத்து
அண்டை அயலவரை அணைத்து எடுத்து
ஆக்கம் ஆக்கி அல்லல் ஒழிப்போம்
பண்டம் மாற்றி பகிர்ந்து உண்போம்
கண்டத்தே இருந்து கடன் நோக்காமல்
அண்ட வாழ்வில் ஆக்கம் சமைப்போம்.