சந்தம் சிந்தும் கவிதை

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

******பெண் என்னும் பேரொளி*****

தன்னலம் காணாத் தரணித் தாரகை
தன்நிகர் இல்லாத் தனித்துவத் தேவதை
இன்னல் கதவை இறுகப் பூட்டி
இன்பம் கதவை அகலத் திறப்பவள்

பின்னே சாதனை அறுவடை காணவே
முன்னே விதைகளை முனைந்து விதைப்பவள்
அன்பெனும் அகல்விளக்கை அனுதினம் ஏற்றி
அருளை ஒளியாய் பரவச் செய்பவர்

எழுவாளே ஏந்திழை ஏற்றங்கள் காண
வழுவிலா அறங்களை வளர்த் தெடுத்து
பழுதிலா உலகை பாருக்குத் தந்து
மெழுகாய் உருகி மேதினி காப்பவள்

மலரும் மலர்களாம் மங்கையர் மண்ணில்
உலவும் நிலவாய் உலா வருபவர்
கலகம் இல்லாது காசினி காக்கும்
நலம் தரும் நாயகி நாளும் வாழ்கவே