சந்தம் சிந்தும் கவிதை

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

* * *திமிர் * * *

நிமிர்ந்த நடை கொண்டு நினைவுகளில் போர் சுமந்து
திமிர் பிடித்து நின்று திடம் கொள்ளும் மன்னா
உமிழ்ந்து உலகம் ஒதுக்க உலகை நீ இழந்து
அமிழ்ந்து போவாய் என்னும் அறிவும் உன்னில் அழிவோ

பிடியாய் வாதம் பிடித்து பீறிட்டு நீ எழுந்து
கொடியைத் தூக்கிப் பிடித்து கோட்டைக்குள் புகுந்து கொண்டு
கடிதாய்ப் போரைத் தொடுத்தால் காண்பாயோ இன்பம் சொல்வாய்

பிஞ்சுகள் வாட நஞ்சை வீசி நின்று
அஞ்சும் மக்களை அலைக்கழித்தால்
தஞ்சம் என்றே தன்நாடு இழக்கும் மக்கள்
நெஞ்சத் துயரம் தான் நீயறிவாயோ சொல்வாய்

உரக்க குரலும் உலகம் எழுப்ப உன்னை மட்டும் ஏற்றிக் கொண்டாய்
இரக்கம் இன்றி இடும்பன் ஆகி
இறக்கும் உயிரை எண்ண மறந்தாய்
அரக்கன் ஆகி அநீதி கண்டால்
அழிவாய் ஓர்நாள் அறிந்தே கொள்வாய்.