சந்தம் சிந்தும் கவிதை

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக

தலைப்பு :* தைத்திருநாள்*

தைமகளை தானழைக்க தையலவர் எல்லாம்
வைகறையில் துயில் நீக்கி வனப்பாக்கித் தம்மை
கைவளையல் தான் ஒலிக்க
களிப்புற்று நின்றே
கைங்கரியம் காரிகையர்
கைகளினால் தருவார்

மண்ணினிலே மாமஞ்சள் கோலங்கள்
மலரும்
திண்ணமுற ஆடவரின்தோரணங்கள்
ஒளிரும்

கண்ணெதிரில் இல்லங்கள் கலையொளி
பரப்பும்

எண்ணமெல்லாம் இனிக்கின்ற இன்பமே இந்நாளாகும்.

புத்தம் புதுப்பானை புன்னகையால் ஏற்ற
சித்திரப்பால் பொங்கி சிங்காரமாய் வழிய
சித்தம் மகிழ்சிறுவர் எங்கும் சிறுகையால்
மத்தாப்பு காட்டி மனமகிழ்ச்சி கொள்ள
புத்தரிசிப் பொங்கல் புதுமணம் கமழும்

செங்கதிரோன் மெல்லெனவே செவ்வானில் ஒளிர
இங்கிதமாய் இன்னமுதம் இலைபரவி
போற்ற
மங்கள விளக்கேற்றி மகிழ்ந்தேற்றி பாட
தங்கிடும் இன்பங்கள் பொன்னாளில் நின்று.