சந்தம் சிந்தும் கவிதை

திருமதி.சக.தெய்வேந்திரமூர்த்தி

எழுசீர் விருத்தம்
மா மா மா மா
மா மா காய்

இளையோர் கடமை
“”””””””””””””””””””
இளையோர் வாழ்வில் இருக்கும் தடைகள்
இயக்கம் கூட்டும் படிக்கல்லாம்
விளைவைப் பார்க்கா விரையும் தன்மை
விழுந்தால் எழுதற் குதவிடுமாம்
களைகள் கண்டால் கவனம் வேண்டும்
கருத்தாய் அவற்றை அகற்றிடலாம்
தளைகள் போடும் தக்கோர் வார்த்தை
தலைமேற் கொண்டு வாழ்ந்திடவே!

துடுக்குத் தனத்தைத் தூரத் தள்ளித்
துயர வாழ்வைப் பகிர்ந்திடலாம்
அடுக்கு வார்த்தை அன்பைக் காட்டா(து)
அணைத்து வார்த்தை யாடிடலாம்
தடுக்கத் தடுக்கத் தயங்கா துழைத்தால்
தலைமைப் பதவி பெற்றிடலாம்
கெடுக்கும் மாந்தர் கேள்விக் கணைகள்
கேடே உனக்கும் அறிவாயே!

பட்டம் பதவி பாரில் வேண்டும்
படித்துப் பயமில் லறிவோடு
சட்டந் தெரிந்து சபலம் இல்லா
சாந்த வாழ்வும் துணைக்கொண்டு
தட்டிக் கேட்கும் தகைமை கொள்வாய்
தவமாம் அன்பைப் போற்றிநிதம்
திட்டந் தீட்டு திகழும் உலகம்
தெரியு முன்றன் கண்முன்னே!