வியாழன் கவிதை

ஜெயம்

கவி
595
இது செய்யாத ஒன்று உலகில் உண்டா

இதைக் கைப்பற்ற இரவுப்பகலாயத் தேடும்
அதை நிறைத்துவிட ஓயாமல் ஓடும்
பணத்தின்மீது பக்தி கொண்ட உலகமடா
குணமிழந்து இதையடைய தினம் கலகமடா

பஞ்சமா பாதகங்கள் செய்வது எதனால்
கொஞ்சம்கூட ஈவிரக்கம் காட்டாரே இதனால்
பெற்றிட்ட பெற்றோரையும் முதியோரில்லம் சேர்க்கும்
அற்றவர் இரந்துநின்றால் குரோதமாய்ப் பார்க்கும்

படித்தவனும் முட்டாளாகிவிடுவான் இதற்கடிமையானால்
மனிதனவன் மிருகமாகிவிடுவான் இதையுடமையாக்கினால்
உறவுகளின் மகத்துவத்தை அறியவைக்காது பணம்
பறந்துபறந்து இதைத்தேடவே அலைபாயும் மனம்

மனிதத்தன்மையை அடியோடு இது கரைத்துவிடும்
துணிந்து புதுப்பாவங்களைச் செய்ய கட்டளையிடும்
மனச்சாட்சியின் செயற்பாடும் காணும் ஆட்டம்
கனவினிலும் துட்டாய்வந்து ஆசை ஊட்டும்

செல்வமிருந்தால் மதிக்குமிந்த உலகமென்று
சொல்லியதால் மதிக்குள் அதை ஊட்டிக்கொண்டு
பணமேதான் வாழ்க்கையென பைத்தியமாய் அலையலாமோ
தனவானாக பிணமெரியும் நரகத்துள் நுழையலாமோ

துட்டுதனை பெட்டிபெட்டியாய் சேர்த்திடுவோரும்
பொத்திப்பொத்தி பூதம்போல காத்திடுவோரும்
ஓர் இரவில் அவரேயறியாமல் மாண்டிடுவார்
யார் இவரின் சொத்துப்பத்தை ஆண்டிடுவார்

ஜெயம்
22-02-2022