வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 645

கிடைத்தற்கரிய அருங்கொடையாம்

பட்டை தீட்டினால்தான் வைரம் பொலிவாகும்
பட்டு உணர்வதிலே வாழ்க்கை தெளிவாகும்
புற்களையும் பதர்களையும்விட மானுடம் பெருமை
இற்றைவரை இவ்வுலகில் கண்டதெல்லாம் அருமை

இன்பம் விட்டுச் சென்றாலும் விலகி
துன்பம் தொடரினும் ஒட்டியே பழகி
கண்டெடுத்த புதையலாய் பூலோக வாழ்வு
கொண்டாடிக் கழிக்கையிலே வந்திடுமோ தாழ்வு

விரைகின்றது நரைதிரை வரைந்தே காலம்
கரைந்து நிழலும் தள்ளாடும் கோலம்
உரைக்கின்றது விதி தேகம் நிலையில்லையென
தரைமேல் பூப்பெதெல்லாம் பூத்தபின்னே வாடுமென

நல்லதோ கெட்டதோ வாழ்க்கையிங்கு பூரணமாக
வல்லவராம் பரம்பொருளும் ஆட்டத்திற்கு காரணமாக
உள்ளத்திற்கு பிடித்தபடி பயணம் நகர்கின்றது
எள்ளலவும் குறைவின்றி காலமும் பகிர்கின்றது

சொந்தமென்றும் உறவென்றும் சொர்க்கமது பூமியாக
இந்தநிலை தந்ததந்த வணங்குகின்ற சாமியாக
பந்தின்மேலே வாய்த்ததிந்த மானிடத்து ஜென்மம்
வந்திடாதோ மறுபடியும் வையகத்தில் இன்னும்

ஜெயம்

22-03-2023