சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச
ஜீவன் ஒன்றானது காதல் என்றானது

பிடித்த உறவொன்று வாழ்க்கைத் துணையாகிவிட
வடிக்கின்றான் கவிகளை கருவும் அவளாகிவிட
துடிப்பை இதயத்தில் எகிற வைத்தவளின்
மடி சாய்ந்து பேச வேண்டுகின்றான்

அரும்பு மீசை துளிர்த்து ஆம்பிளையானதால்
வரம்புமீறி ஆசையில் தத்திக் குதிக்கின்றான்
பருவம் வந்துவிட்டதால் உறவுக்காக அலைகின்றான்
தருணம் பார்க்கின்றான் எப்போதென காதலைக்கூற

உன்னை நினைத்தே வாடுகின்றேன் என்கின்றான்
தன்னை மறுத்தால் பைத்தியமாவதாக புலம்புகின்றான்
கண்ணைப்பார் உன்னுருவம் தெரிகியுமென மன்றாடுகின்றான்
உண்மையாக நேசிக்கிறேன் ஏற்றுக்கொள்ளென யாசிக்கின்றான்

விரியாத இதழ்கள் தேனைச் சொரிந்தன
பரிசாக காதலை அருளினாள் தேன்மொழியாள்
புரிந்துகொண்ட அக்கணத்திலேயே இதயங்கள் இடம்மாறின
தெரிந்திராத புதிய உணர்வங்கு சொர்கங்கட்டியது

அகப்பட்டுக்கொண்டனர் இருவரும் காதல் பிடிக்குள்
நகமும் சதையுமென பிரியாத உண்மையுறவுக்குள்
சுகத்திற்கு இனிமேலும் குறையுந்தான் உளதோ
பகர்ந்த மணமாலையால் சொந்தமும் நிலையென்றானதோ

ஜெயம்
14-02-2023
https://linksharing.samsungcloud.com/gdv4I9XsVQqu