வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 639

வாழ்க்கை என்பது

வேலைக்காகவே வாழ்க்கையா வாழ்க்கையே வேலைக்காகவா
வேலை கலையானது உழைப்பு உயிரானது
இருபத்து மூன்றில் தொடங்கியது
தொடர்கின்றது

மகிழ்ச்சிக்கு வேலிபோட்டு நடாத்துகின்ற பிழைப்பா
இளமையைச் செலவாக்கி பணத்தையடையும் நிகழ்வா
ருசித்துப் புசிக்காமல் பசிக்குப் புசித்து
வேலைமீது வேலை வேலையோ வேலை

அறுபத்தேழு வயதுடன் எட்டுமாதத்தின்பின்னரே ஓய்வூதியமாம்
மாத இறுதியில் சம்பளத்தின்போது தற்காலிகமாக மகிழ்ச்சி நுழையும்
கஸ்டங்களை கலைத்து வாழ்கையும் கொஞ்சும், அப்போது
விடியற்காலையில் தூக்கத்தைக்கெடுக்கும் அலாரத்தையும் மன்னிக்கத்தோன்றும்

முதுமை, கோலத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது
புதிய நுட்பங்கள் நிறைந்த சாதனங்களின் படையெடுப்புடன்
போட்டிபோட முடியவில்லை மூச்சு வாங்குகின்றது
முழங்கால் சிரட்டையில் தேய்வு
நாரியும் பிடிக்கின்றது

உண்மையில் வேலைதான் இல்லற வாழ்க்கைக்கு பச்சைக்கொடி காட்டியது
அன்பின் கனிகள் வரங்களின் வரவாககியும்
நேரச்சுருக்கம் நேசத்தையும் பாசத்தையும் சிந்தவிடவில்லை

உறக்கத்திலும் வேலை பற்றிய கனவுகளே
பூவோடு நாரைப்போல் வாழ்க்கைக்குள் வேலை
இன்னும் சொல்ல நிறையவேயிருக்கின்றது இப்போது
நேரமில்லை, வேலை

ஜெயம்
09-02-2023
https://youtu.be/HQ_lzRHzBKc