வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 637
ஜென்ம பந்தம் உண்மைச் சொந்தம்

இருமனம் இணைந்திட்ட  திருநாளும் வந்தது
அன்பும் மகிமை கண்டது
உருவங்கள் இரண்டென தெரிந்தாலும் வெளியில்
உள்ளங்களின் ஓசைகள் ஒன்றென
நெருக்கத்தின் அதிகரிப்பில் காதல் சிறப்படைந்தது
பாசம் இல்லறத்துள் காணிக்கையாக்கப்பட்டது
திருமண பந்தம் புதியதோர் சொந்தம்
வாழ்க்கை மகிழ்ச்சியை சுவாசித்தது

மண வாழ்க்கை மனம் கோணாமலே
நாளுக்குள் இன்பம் வரவானது
தனக்கென்று இல்லாமல் தமக்கென்ற வாழ்வு
உறவு உன்னதம் அடைந்தது
கணக்கில்லா விட்டுக்கொடுப்புக்கள் காரணம் கல்யாணம்
சுகங்கள் கணங்களை உண்டாக்கின
தினம் ஜீவன்களை ஒன்றாக்கிய தினம்
தேனுண்ணும் வண்டாகிடும் மனங்கள்

கவியும் இசையும் இணைந்தது போல
நேசத்தைப் புதைத்த பந்தம்
தவிப்புகள் பாசத்தை பரிமாற என்று
ஜென்மம் சந்தோசத்தை தாங்கிக்கொள்ளும்
தெவிட்டாத ஆனந்தம் அழகான காலம்
இணைவதால் நிகழ்ந்திட்ட அதிசயம்
புவி வேறொன்று இனித் தேவையில்லை
காதலில் வைக்கவில்லை மிச்சம்

பெண்ணுக்கு இணையாய் வேறொரு படைப்பா
இல்லவே இல்லை பூலோகத்தில்
இன்னொரு வீட்டில் ஒளியேற்றி வைத்து
தொழிற்படுவாரே பொன்னாக மின்னியே
அன்றாடம் கழிந்தது வாழ்க்கையை எழிலாக்கி
அன்பே என்பது மந்திரமானது
ஒன்றிய சுவாசங்களின் ஒரு மூச்சு
ஆயுளுக்கும் விட்டு போகாது

ஜெயம்
25-01-2023