சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

புரியாத புதிர்

முன்னால் வாயார புகழ்ந்து பேசுவார்
பின்னால் போற்றிய வாயாலே ஏசுவார்
மண்ணகத்தில்  வாழுகின்றார் ஒருசிலர் இப்படியாக
இன்றுவரை புதிரென புரியமுடியாமலே அப்படியாக

நல்லவரா தீயவராவென முடியவில்லை புரிய
உள்ளத்தில் உள்ளவற்றை முடியவில்லை அறிய
சொல்லின்மேல் தேன்தடவி பேசுகின்ற சிலபேரும்
தள்ளிப்போய் காட்டுகின்றாரே உண்மைச் சுயரூபம்

இந்த வாழ்க்கையொரு மர்மமாகவே இங்கே
சொந்தமென கொண்டாடிவிட்டு திண்டாடவைப்பார் அங்கே
எந்த மனிதர் கைவிடுவார் எப்போது
அந்தநிலை  தெரியாது சத்தியமாய் இப்போது

புதிராக இறைவனையும் விதியையும் பார்த்தவர்
புதிதாக புரிந்துகொள்ளா மனிதரையும் சேர்த்தனர்
பதிலறியப்படாதவைகள் பெரும் புதிர்களாக மட்டுமே
வதிவிடத்து அறியாத வாழ்க்கை நட்டமே

ஜெயம்
17/01/2023