வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 599
துளி நீர்

நிலைத்து இன்னும் வாழ்கின்றது உயிர்
தலைநிமிர்ந்து உயர்ந்து வளர்கின்றது பயிர்
மேகந்தரும் வரமாய் மழைநீரைப் பாரு
தாகந்தீர்க்கும் சாமியென்றே அதனைக் கூறு

வேருக்கு பாலூட்டி ஊருக்கு உணவூட்டும்
ஆறாகி காய்ந்த தரையை குளிப்பாட்டும்
அளவாய் வந்து அள்ளியே தந்திடும்
வளமான பூமியை துளிநீர் செய்திடும்

நீர் இன்றி அமையாது உலகு
பார் மனிதா மதிப்பததை அழகு
சேறாக்கி சோறுத்தரும் நீரென்ற அமுது
ஊறாது நீர்போனால் பஞ்சமொன்றே நமது

நிலத்தடியில் கிடைக்குமொரு வாழ்வுதரும் பொக்கிஷம்
வளர்த்துவிட மரஞ்செடியை தரையெங்கும் பசுமையின்வசம்
சிக்கனமாய் செலவுசெய்வோம் ஒருசொட்டு நீரையும்
அக்கறையோடு பார்ப்போமே வறட்சியால் வாடுவோரையும்

விழித்துக்கொள்ள வந்துகொண்டது நல்ல நேரம்
துளி நீரையும் வீணாக்காது காப்போம் புவியீரம்
நீரின்றி ஓருயிர்க்கூட தவித்திடல் ஆகாது
பாரதனைக் காத்திடுவோம் நீர்வற்றிப் போகாது

ஜெயம்
22-03-2022