சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

விழிப்பு

தூங்கிய உணர்வுகள் மெல்லவே விழிக்கட்டும்
ஊக்கம் வாழ்க்கைக்குள் பொங்கியே வழியட்டும்
தினக்காட்சிகள் நிகழட்டும் இயற்கைக்குள் உட்பட்டு
மனச்சாட்சி உருவாக்கட்டும் இதற்கான படிக்கட்டு

எது வேண்டுமென்றாலும் நடப்பது நடக்கட்டும்
அது அது அப்படியே கிடக்கட்டும்
என்பதான ஊரோடு ஒட்டாத மணப்பாங்கு
மண்ணுலக வாழ்க்கைக்கு செய்கின்ற தீங்கு

மயக்க நிலையது தொடர்வது வீனென்று
சுய உணர்வுடன் இருத்தலும் நன்று
உணர்வதன் சரியான உண்மையான கலையது
மனமது பழகாது தவிர்த்திடின் பிழையது

அறியவேண்டியதை அறியாமலிருப்பது அறியாமையின் பக்கம்
தெரிந்துகொண்டபின் மாறாமல் இருப்பதும் வெட்கம்
கவனிக்க வேண்டியவற்றை கவனிப்பதே நலம்
அவனியில் விழிப்புடன் இருக்கவேண்டாமோ மனிதகுலம்

ஜெயம்
05-05-2024