சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

ஊக்கம்

ஊக்கம் ஒவ்வொருவருக்கும் உயர்வைத் தரும்
ஆக்குகின்ற மனிதர் காலம் நன்மைபெறும்
தேக்கம் காணாத வாழ்க்கையே தரம்
பூக்கும் நாட்கள் எல்லாமே வரம்

வீழ்ச்சி அவ்வப்போது வந்துவந்தே போகும்
தாழ்வில் தளர்ந்துகொண்டே உள்ளமதும் நோகும்
பள்ளத்தை தாண்டியே வெள்ளம் ஓடுவதில்லையா
துள்ளியே வெளிவந்து பாதைதனை தேடுவதில்லையா

விழுவதும் எழுவதும் சொல்லப்போனால் இயற்கையே
அழுதுகொண்டு முயலாமல் முடங்குவது செயற்கையே
சோதனைகள் இன்று வெற்றி நாளையாகலாம்
வேதனைகள் எல்லைதாண்டி மகிழ்ச்சியின் வேளையாகலாம்

இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்
நிலமையில் வரவேண்டும் கட்டாயம் திருத்தம்
அச்சமில்லாதவனே இங்கு அம்பலம் ஏறுவான்
உச்சங்களின் அனுபவிப்பை உரக்கவே கூறுவான்

வெற்றியை நோக்கிய மானிட ஓட்டம்
சற்று தாமதித்தாலும் கொள்ளலாமோ வாட்டம்
விடாமுயற்சியதே தந்துவிடும் தளராத தன்னம்பிக்கை
தடைகளை உடைத்தெறிந்தே அடைந்துவிடு இலக்கை

ஜெயம்
01-04-2024