சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

மாறுமோ மோகம்

மனதில் ஒலித்திடும் தீய ஓசை
குணத்தை அழித்திடும் அதீத ஆசை
மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி
பேயாக ஆட்டம்போட்டு கண்டிடுமே வளர்ச்சி

பற்று என்பது விருப்பத்தின் வெளிப்பாடு
சற்று அதிகமானால் அதுவே குறைபாடு
சிலப்பதிகாரத்தில் கோவலனும் வேட்கையின் வேகத்தால்
பலரின் வாழ்க்கை சரிந்ததுவும் மோகத்தால்

பற்பல மோகங்கள் மனிதர்களைக் கவரும்
பற்றை தாண்டிப்போய் வெறியாகிவிடார் சிலரும்
எத்தனை மோகங்கள் என்னென்ன வடிவில்
அத்தனையும் ஆட்டிவிட்டே வெளியேறும் முடிவில்

பெண்மீது கொண்டோர்கள் முடிந்திட்ட கதையும்
மண்மீது கொண்டோர் மண்ணுக்குள் புதையும்
வரலாற்று நிகழ்வுகள் ஆயிரம் உண்டு
உருண்டன பேரசுகள் பேராசைகளால் அன்று

ஆடவர் தேகத்தினவுக்காக இரையாகும் பெண்மை
ஊடகங்களில் அன்றாட செய்தியாகின்றது உண்மை
மோகநிலையற்ற சமுதாயம் உருவாகுவது எப்போது
சோகமேயின்றி நடைபோடாதோ வாழ்க்கை அப்போது

ஜெயம்
23-03-2024