வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 713

இப்போதெல்லாம்

இப்போதெல்லாம் உலகம் அடியோடு மாறிவிட்டது
அப்போதிருந்த நிலைமைகளின் எல்லைகளை மீறிவிட்டது
எந்திரமாகி கடிகாரத்துடன் போட்டிபோடும் சூழ்நிலை
விந்தையான உலகாகி இரவையும் பகலாக்கும் வாழ்நிலை

அந்தக்காலம் அது இயற்கையான வாழ்க்கை
இந்தக்காலம் செயற்கைக்குள் செருகிய வாழ்க்கை
பெற்ற மகிழ்ச்சிகளோ அன்று தாராளம்
வெற்று நிகழ்ச்சிகளாக இன்றோ ஏராளம்

குறைந்த வருமானத்தில் நிறைந்த நிம்மதியன்று
நிறைந்த வருமானத்தில் குறைந்தது நிம்மதியின்று
வீடுமுட்ட உறவுகளோடு கூடிக்களித்த காலமது
வீடுகள் பலவுண்டின்று தனிமையிலோடும் நாளுமது

பெரியவர் சொல்லைக்கேட்டு வளர்ந்ததெல்லாம் அப்போது
பெரிதாகவொன்றும் மூத்தோரை மதிப்பதில்லை இப்போது
முதுமையிலுமன்று சந்தோசங்களை அனுபவித்தது பழமை
புதுமையின் நடுவிலே தள்ளாடுதின்று இளமை

இறைவனை வணங்காத நேரமில்லை அப்போது
இறைவனை வணங்கவே நேரமில்லை இப்போது
உணவும் உறக்கமும் நேரத்திற்குநேரம் நிகழ்ந்ததன்று
பணமே வாழ்கையாகி பழக்கம் இடம்மாறியதின்று

சிரிப்பை மறந்து வெறிச்சோடிய வாழ்க்கை
சரியென்றே சரியில்லா கலியுகத்து வாழ்க்கை
இப்போதெல்லாம் மனிதர்கள் மாறிப்போன காலம்
எப்போதுமே கணனியினால் சிறைப்படும் கோலம்

29-02-2024