வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 710

செல்லமே என் செல்வமே

சிந்திடும் புன்னகையால் உள்ளம் பூரிக்குமே
உதிர்க்கின்ற சொல்லாலே செவிகளில் அமுதூறுமே
கடைச்சிரிப்பால் உடலுள்ளே உயிரும் சிலிர்த்திடுமே
தடைப்பட்ட சந்தோசத்தை மழலைமொழி பொழிந்திடுமே

செல்லமே செல்வமே அள்ளிக்கொள்ள வாராயோ
உள்ளத்தில் உவகையை மொத்தமாய்த் தாராயோ
சித்திரமும் உயிர்பெற்று அழகாக அசைவதென்ன
நித்திரையில் கனாக்களிலும் குறும்புகளைப் புரிவதென்ன

கன்னக்குழி அழகினை விபரித்திட வார்த்தையில்லை
உன் செயலோ விழிகளிற்கு சொர்கவெல்லை
தூங்குகின்ற அழகைப்பார்க்க கோடிக்கண்கள் வேண்டுமன்றோ
ஏக்கங்களும் கவலைகளும் மனதைவிட்டு நீங்குமன்றோ

சொர்க்கத்தின் உச்சமதை உணர்வும் அடைவதென்ன
பக்கத்தில் நீயிருந்தால் பசிக்க மறுப்பதென்ன
குழந்தையாய் அருகிரிந்து குதூகலிக்க வைக்கின்றாய்
புலர்ந்திடும் பொழுதுகளில் நினைவுகளை மொய்க்கின்றாய்

விம்மிவிம்மி அழும்போதும் அதுவுங்கூட அழகு
அம்மாவின் அரவனைப்பால் ஒளிர்ந்துவிடும் நிலவு
மண்ணிலே உதித்திட்ட புதியதொரு விண்மீனே
ஜென்மமிது நிறையுமட்டும் என்னுலகம் நீதானே

ஜெயம்
08-02-2024
https://youtu.be/d3CO1CtOSvs?si=vL0rNp5I_rXReg5w