வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 708

அமைதி

அமைதியான வாழ்வில் மகிழ்ச்சியுறாதோ உள்ளம்
அமைந்திடும் நாட்களால் இன்பமுறாதோ இல்லம்
துன்பங்களும் துயரங்களும் வந்துவிட்டு போகட்டும்
மண்கொண்ட வாழ்வில் நிம்மதியும் சூழட்டும்

புறச்சூழல் அமைதியை ஆக்கிரமிக்க வரும்
மறத்தலும் மன்னித்தலும் நிம்மதியை தரும்
புத்தரும் இயேசுவும் அமைதியாலே சாதித்தவர்கள்
தத்துவத்தை தரணியில் அதன்மூலம் போதித்தவர்கள்

சிந்தையை அடக்குவது சிரமமான காரியமோ
வந்ததுகொண்ட சோகங்களும் அணைதனை மீறியதோ
புதிரான வாழ்க்கையிலே தினமொரு போராட்டமோ
எதிர் நீச்சல் போட்டபடி வாழ்வாட்டமோ

தாழ்வும் உயர்வும் துக்கமும் மகிழ்ச்சியும்
வாழ்வில் அமைந்துகொள்ளும் இப்படியான நிகழ்ச்சியும்
எதிர்மறை உணர்வுகளால் உண்டாகும் மனத்தளர்ச்சி
இதிலிருந்து தப்பாவிட்டால் ஏதிங்கு மனவளர்ச்சி

தீர்க்க முடியாதவையும் அமைதியாலே தீர்ந்துவிடும்
வார்த்தைகள் ஆயிரத்தை மவுனம் கோர்த்துவிடும்
அசைபோடுவதால் சோகத்தை என்னதான் இலாபம்
இரசித்துவிட வாழ்க்கையினை நெருங்கிடுமோ பாவம்

அழுத்தங்களை போக்கிவிடும் அருமையான மருந்து
பொழுதுகளும் படைத்துவிடும் சந்தோச விருந்து
சங்கடங்கள் எங்கே பிரச்சினைகள் எங்கே
தங்கிவிட அமைதி மங்கிவிடும் இங்கே

ஜெயம்
24-01-2024
https://youtu.be/X1h9R34V0q8?si=MnSZg2wRN0heThYP