வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 704

விடைபெறும் ஆண்டே

விடைபெறும் ஆண்டதுவை சற்றுத் திரும்பிப்பார்க்கின்றேன்
உடைத்து பயணித்த தடைகளைக்கண்டு வியக்கின்றேன்
தொடக்கத்திலிருந்து முடிவுவரை எத்தனையெத்தனை பெற்றவை
கடந்து வருகையில் எத்தனை கைவிட்டவை

நரிகளுடன் உறவாடி வடைகளை இழந்திருக்கின்றேன்
கருநாகங்களிற்கு பாலூட்டி கொத்திவிட கலங்கியிருக்கின்றேன்
தேழ்களின் தோழமை கொட்டிவிட வலித்திருக்கின்றேன்
யானைகளுடன் போராடும் எறும்பாக முழித்திருக்கின்றேன்

இருபத்துமூன்றின் பாதைகளிலும் குறைந்ததாக மலர்வளம்
இரும்பினாலான மனங்கொண்ட மனிதருடனான வலம்
நரம்பில்லா நாக்குகளுடன் வரம்புமீறும் பித்தர்களும்
வரந்தரவே வேடமேற்ற கலியுகத்து புத்தர்களும்

இன்பத்தை நாட்களுக்குள் குடியேற்றிவிட துடித்தேனே
துன்பம் தானேவந்து படியேறிட தவித்தேனே
நான் நட்டவற்றில் போனததிகம் வாடியே
வேண்டியதெல்லாமே வரவில்லை அருகில் கூடியே

கண்டுகொண்ட கனவுகளெல்லாம் இன்னும் உறங்குநிலையிலே
வண்ணவண்ண ஆசைமீன்கள் சிக்கியே வலையில்
முண்ணூற்று அறுபத்தைந்து நாட்கள் விரைந்ததென்ன
எண்ணற்ற எண்ணங்கள் ஈடேறாது கரைந்ததென்ன

குறையேசொல்லும் மனிதனாகவே நான் மாறிவிட்டேனா
நிறைவைக்கானா மனதினால் நான் கெட்டேனா
அள்ளியள்ளிக்கொடுத்த ஆரோக்கியம் அறிவுக்குப் புரியவில்லையா
பள்ளியில்லாமல் சொல்லித்தந்ததே அனுபவங்களை அறியவில்லையா

மன்னித்துவிடு இருபத்துமூன்றே சுயநலத்தால் புலம்பிவிட்டேன்
கண்டவுடன் கிடைத்திடாது நிறையவேதான் கற்றேன்
நன்றிகூறி வழி அனுப்பிவைக்கின்றேன் உன்னை
நன்மையாண்டே நீ தந்துகொண்டதே உண்மை

ஜெயம்
28-12-2023