சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

சிரிப்பு

யாரெல்லாம் கொள்வாரோ மனதுள் இறுக்கம்
பார் அவரை ஊருலகமே வெறுக்கும்
சிரிப்பால் தீர்ந்துவிடும் உள்ளத்தின் களைப்பு
தெரிந்தும் இருந்திடலாமோ விடாது அழைப்பு

புன்னகைத்துப்பார் வதனத்தில் குடிகொள்ளும் அழகு
உன் பேச்சினாலே மயங்குமிந்த உலகு
குழந்தை போல உனைமறந்து சிரித்துவிடு
இழந்த சுகங்களை மறுபடியும் பெற்றுவிடு

அழுத்தம் போக்கும் அற்புத மருந்து
அழுகையை ஆற்றும் புன்னகை விருந்து
இன்பத்தின் எல்லைக்கே கொண்டுசெல்லும் நிகழ்வு
உண்மையில் இதனாலன்றோ ஆரோக்கிய வாழ்வு

என்றென்றும் புன்னகையை தவழவிடு உதட்டுடன்
கண்ணீரும் கவலைகளும் அகன்றுவிடும் வீட்டுடன்
மானுடர்க்கே உரித்தான அதியுயர் சிறப்பிது
பேணியிதைக் கொண்டிட்டால் மகிழ்ச்சியெங்கே தப்பிப்பது

ஜெயம்
21-12-2023